என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 15 மே, 2016

வாக்குப் பதிவு இயந்திரம் சில சுவாரசிய தகவல்கள்-Electronic Voting Machine

கட்டுப்பாட்டுக் கருவி                              வாக்குப்பதிவுக் கருவி 

       நாளை இந்த வேளை  வாக்குப் பதிவு முடிந்திருக்கும்.அதுவரை பொழுது போக வேண்டாமா ? முதன் முறையாக வாக்களிக்க செல்லப் போகிற இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்  தங்கள் வாக்கைப்பதிவு செய்ய . ஒட்டுப் போட செல்லு முன் வாக்குப் பதிவு இயந்திரம் பற்றி சில தகவல்களை தெரிந்து கொண்டால் நல்லது அல்லவா?  கடந்த சில தேர்தல்களில் வாக்கு சீட்டுகளுக்கு பதிலாக வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்துவதை அறிவோம். சுப்ரமணிய சாமி போன்றோர் வாக்குப் பதிவு இயந்திரத்தை முதலில் எதிர்த்தனர்.அதன் நம்பகத் தன்மை குறித்து கேள்விகள் எழுப்பினர். ஆனால் பின்னர் ஏற்றுக் கொண்டனர்.நிறை குறைகள் எல்லாவற்றிலும் உண்டு. என்னைப் பொறுத்தவரை வாக்கு சீட்டு முறையை விட  வாக்குப் பதிவு இயந்திரம் நம்பகத் தன்மை உடையதாகத்தான் இருக்கிறது. வாக்கு சீட்டு முறையில் மோசடிகள் செய்வது போல இதில் செய்வது எளிதல்ல.

இதைப் பற்றிய  சில தகவல்களை கேள்வி பதில் வடிவில் காண்போம் 

1.வாக்குப் பதிவு இயந்திரம் என்பது என்ன?அது எந்த முறையில் வாக்கு சீட்டு முறையை இருந்து வேறுபடுகிறது ? 
          வாக்குப் பதிவு இயந்திரம் என்பது  வாக்கு சீட்டில்  விரும்பும் சின்னத்தில்    முத்திரை இடுவதற்கு பதிலாக இயந்திரத்தில் சின்னத்திற்கு  நேரே உள்ள நீல நிற பட்டனைஅழுத்தினால்  வாக்கு  பதிவு செய்யப்பட்டு நினைவகத்தில் சேமிக்கப் படும். இவ்வியந்திரம்  இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று கட்டுப்பாட்டுக் கருவி (Control Unit) இன்னொன்று வாக்குப் பதிவுக் கருவி.(Balloting Unit) இவ்விரண்டும் மின் கம்பி வடத்தால் இணைக்கப் பட்டிருக்கும்  இவற்றில்  வாக்காளர் பயன்படுத்தப் போவது  வாக்குப் பதிவுக் கருவி மட்டுமே.  கட்டுப்பாட்டுக் கருவி ஒரு அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும். 
            
2.முதன் முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் எப்போது அறிமுகப் படுத்தப் பட்டது?
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் 1989-90 இல் தயாரிக்கப்பட்டாலும் 1998 இல்தான் முதல் முறை 16 தொகுதிகளில் சோதனை முயற்சியில் பயன்படுத்தப் பட்டது. புதியது எதையும் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்வோமா .என்ன? இதை வடிவமைத்ததில் எழுத்தாளர்  சுஜாதாவின் பங்கும் உண்டு 

3. மின்சாரம் தடைபட்டால் வாக்குப் பதிவு இயந்திரம் வேலைசெய்யுமா ?

மின்கலத்தால் இயங்குவதால் மின் இணைப்பு இல்லாவிட்டாலும் இயங்கும் .ஸ்பேர் பேட்டரிகளும் தயாராக இருக்கும் 

4. ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எத்தனை ஓட்டுகள் பதிவு செய்ய முடியும் ?

3840 ஓட்டுக்கள் பதிவு செய்ய  முடியும் ஒரு வாக்கு சாவடியில் அதிக பட்சம் 1500 ஓட்டுகளுக்கு மேல் இருக்காது..

5.எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்த முடியுமா ?

அதிக பட்சம் ஒரு வாக்குப் பதிவுக் கருவியில் 16 வேட்பாளர்கள் மட்டும் இடம் பெற முடியும்..அதிக பட்சமாக  4 வாக்குப் பதிவுக் கருவிகளை மட்டுமே ஒரு கட்டுப்பாட்டுக் கருவியுடன் இணைக்க முடியும். எனவே 64 வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்குப் பதிவு இயந்திரத்தில் இடம் உண்டு, நோட்டாவும் இடம் பிடித்துவிட்டதால் 63 வேட்பாளர்கள் போட்டியிட்டால் மட்டுமே இயந்திரம் பயன்படுத்த முடியும் , அதற்கு மேல் போனால்  வாக்கு சீட்டு முறைதான் இப்போதைக்கு வேறு வழியில்லை 

6.மின்னணு இயந்திரத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட்டுவிட்டால் வாக்குப் பதிவு தடை பட்டு விடுமே .

 10 வாக்கு சாவடிகளுக்கு ஒரு அலுவலர் இதற்கான பொறுப்பில் இருப்பார். உடனடியாக வேறு இயந்திரம் கொண்டு வரப்பட்டு விடும்..நடந்த வரை வாக்குகள் நினைவகத்தில் சேமிக்கப் பட்டிருக்கும் என்பதால் வாக்குப் பதிவு முதலில் இருந்து தொடங்கத் தேவை இல்லை .விட்ட இடத்தில் இருந்து தொடங்கலாம் 

7.மின்னணு இயந்திரம் பயன்படுத்துவதால்  செலவு அதிகம் அல்லவா?

இல்லை. வாக்கு சீட்டு  முறையை விட இதில் செலவு குறைவே .மேலும் வாக்கு  எண்ணிக்கை விரைவில் முடித்து விட முடியும். குறைவான பணியாளர்களைக் கொண்டு விரைவில் முடிக்க முடியும். அதனால் செலவு குறைவே ..

8.வாக்கு சீட்டு முறையில் செல்லாத ஓட்டுகள் பதிவாகிடும் அதே போல இயந்திர முறையிலும் செல்லாத ஓட்டுக்கள்  பதிவாகுமா?

மின்னணு இயந்திரத்தில் செல்லாத வாக்குகள் பதிவாக வாய்ப்பு இல்லை 

9.நம் நாட்டில் கணிசமான அளவுக்கு கல்வியறிவு இல்லாதவர்கள் இருப்பதால்  மின்னணு இயந்திரத்தின் மூலம் வாக்கு செலுத்துவதை கடினமாக இருக்காதா ?

நிச்சயமாக இல்லை.உண்மையில் வாக்கு சீட்டை வாங்கி அதில் முத்திரை இட்டு முறையாக மடித்து வாக்குப் பெட்டியில் போடுவதை விட எளிமையாக சின்னத்திற்கு நேராக உள்ள பட்டனை அழுத்தி வாக்களித்து விட முடியும் 

10.வாக்கு சாவடிகள் கைப்பற்றுதல் போன்ற அசம்பாவிதங்களால் மின்னணு வாக்குப் பதிவு பாதிக்கப் படுமா?

நிச்சயம் பாதிக்கப் படும்.  மின்னணு இயந்திரம் வாக்குப் பதிவை எளிதாகவும் துல்லியமாகவும் ஆக்குமே தவிர இதனை தடுக்க காவல் துறையின் உதவிதான் அவசியம் 

11. மின்னணு இயந்திரம் பயன் படுத்துவதால்  வாக்குப் பதிவு தாமதம் ஆகுமா?


நிச்சயமாக இல்லை .உண்மையில் வாக்கு சீட்டு முறையை விட வேகமாகவே வாக்குப் பதிவு நடக்கும், வாக்கு சீட்டு முறையில் வாக்கு சாவடி அலுவலர் கையொப்பம் இடவேண்டும் வாக்கு சீட்டிலும் கவுண்டர் ஃபாயிலிலும் சில விவரங்களை எழுத வேண்டும் அதற்கு நேரம் அதிகம் செலவாகும். வாக்கு சீட்டுக் கணக்கு பராமரிப்பதிலும் முடிப்பதிலும் தலைமை  அலுவலருக்கு  அதிக நேரம் தேவைப்படும் . இவை மின்னணு இயந்திரம் பயன்படுத்துவதால் தவிர்க்கப் படுகிறது,


12.கட்டுப் பாட்டுக் கருவியில் உள்ள வாக்கு முடிவுகள், பதிவான வாக்குகள் விவரம் எவ்வளவு நாள் வைத்திருக்க முடியும்.

   10 ஆண்டுகள் வரை அழியாமல் விவரங்களை வைத்திருக்க முடியும் 

13. ஒரு வாக்காளர் இரண்டு மூன்று முறை பட்டனை அழுத்தி வாக்கு பதிவு செய்து விட்டால் என்ன செய்வது?

நிச்சயம் முடியாது. ஒரு தடவைக்கு மேல் அழுத்தினால் பட்டன் வேலை செய்யாது. அடுத்த ஓட்டை பதிவு செய்ய கட்டுபாட்டு அலுவலர் கட்டுப்பாட்டுக் கருவியில் உள்ள பட்டனை அழுத்த வேண்டும்.  

14. நமது ஒட்டு பதிவாகி விட்டது என்பதை எப்படி அறிந்து கொள்வது?

பட்டனை அழுத்தியவுடன் பீப் சவுண்ட் சில வினாடிகளுக்கு கேட்கும்.அருகே உள்ள LED எரியும்.. பீப்   ஒலித்த பின் மீண்டும் பட்டனை அழுத்தினாலும் ஒட்டு பதிவாகாது .

15. ஓட்டுப் பதிவின் போது ஒரு குறிப்பிட்ட அளவு ஓட்டுக்கள் சரியாக பதிவாகுமாறும் பின்னர் எந்த பட்டனை அழுத்திடினாலும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஒட்டு விழும்படியும் கருவியை மாற்றி அமைக்க முடியுமா?

மின்னணு இயந்திரத்தில் பயன்படுத்தப் படும் மைக்ரோ சிப் பல நாட்களுக்கு முன்னதாகவே சீல் செய்யப்பட்டுவிடும் அதனை மாற்றி அமைக்க முனைந்தால் பழுதாகிவிடும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. . மேலும் அதற்கு அதிகமான தொழில் நுட்ப அறிவு தேவைப்படும்.. அப்படி மாற்றி அமைக்க வேட்பாளர் பெயர் எத்தனையாவதாக இடம்பெறும் என்பது தெரிய வேண்டும்.  கடைசி நேரத்தில்தான் தெரிவிப்பார்கள் என்பதால் ஒரு குறிப்பிட்ட  நபருக்கு ஒட்டு விழும்படி அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. பல்வேறுகட்ட பாதுகாப்பு அம்சங்களும் சோதனைகளும்  வேட்பாளர்கள் முன்னிலையில் நடத்திக் காண்பிக்கப்படும் என்பதால்  இது போன்ற முறைகேடுகளுக்கு வாய்ப்பு இல்லை என்று நம்பலாம் 
( நாளை நேரம் கிடைத்தால் விரிவாக ஒரு பதிவை எழுதுகிறேன் ,)

16.தேர்தல் முடிந்ததும் வேறு யாரவது எங்காவது இயந்திரத்தில் வாக்குகளை பதிவு செய்து விட முடியுமா?
முடியாது. வாக்குப் பதிவு முடிந்ததும் கட்டுப்பாட்டுக் கருவியில் உள்ள Close பட்டனை அழுத்தி  விட்டால் அதற்குப் பின் யாரும் ஓட்டுப் போட முடியாது. வோட்டுக்கான பட்டனை அழுத்தினாலும் ஒட்டு பதிவாகாது . மேலும் Close பட்டனை அனைத்து ஏஜெண்ட்டுகளின் முன்னிலையில்தான் அழுத்தி சீல் வைப்பார்கள். அப்போது அந்த பூத்தில் பதிவாகியுள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக் கருவியில் திரையில் தோன்றும்.அதனை ஏஜெண்டுகள் குறித்துக் கொள்ளலாம். இது பற்றிய விவரக் குறிப்பு  பூத் ஏஜெண்டுகளுக்கு வழங்கப்படும். அதனை வாக்கு எண்ணிக்கையின்போது கொண்டு சென்று சரிபார்த்துக் கொள்ள முடியும்.

16.  புதியதாக  ஏதேனும் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதா?
சோதனை  முயற்சியாக சில இடங்களில் வாக்களிக்கும்போது தான் வாக்களிக்கும் சின்னம் அச்சுப்பொறியில் தோன்றுவதை பார்க்கும் வகையில் கூடுதலாக அச்சு இயந்திரமும் இணக்கப்பட்டுள்ளது.. நம் வாக்களித்த சின்னம் கண்முன் சில வினாடிகள் காட்சி அளித்து பின் பிரிண்ட் எடுக்கப்பட்டு பெட்டியில் விழுந்து விடும் .

( நாளை வாக்கு சாவடியில் வாக்குப் பதிவிற்கு முன்னதாக என்னென்ன செய்வார்கள் என்பதை பார்க்கலாம்)

இந்த தேர்தலை சிறப்பாக நடத்த முனையும் தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் ஆசிரியர்கள் அலுவலர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் 

முதன் முதல் வாக்களிக்க இருக்கும் இளைய சமுதாயத்தினருக்கு  வாழ்த்துகள் .

இப்பதிவு  தேர்தல் ஆணைய வலைப்பக்க தகவல்கள் மற்றும் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.

******************************************************************************

தேர்தலில் வாக்களிக்க மறவாதீர் 
தமிழ்மண வாக்களிக்கவும் மறவாதீர் 
                      தேர்தல் ஸ்பெஷல் பதிவுகள்  


11 கருத்துகள்:

  1. நல்ல விவரமான உபயோகமான பதிவு. இன்று காலை, எனது முதல் ஓட்டு தமிழ்மணத்தில் உங்களுக்குத்தான். இனிமேல்தான் 8 மணிக்கு மேல், சட்டமன்ற தேர்தல் வாக்குச் சாவடி செல்ல வேண்டும். வெளியே மழைத்தூறல்.

    பதிலளிநீக்கு
  2. விரிவான தகவல்கள்..... தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்காத பொதுமக்களுக்குப் பயன்படும்.

    பதிலளிநீக்கு
  3. இது பூத் ஆபீசர்களுக்கு தேவையான பதிவு :)

    பதிலளிநீக்கு
  4. அருமை! அருமை!
    சிறந்த தொழில் நுட்பப் பதிவு

    பதிலளிநீக்கு
  5. வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி மக்களுக்கு எழும் அத்தனை சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யும் அருமையானதொரு பதிவு. நன்றி முரளிதரன். நாங்கள் இங்கு ஆஸியில் இன்னும் பேப்பர் பென்சில் கொண்டுதான் வாக்குகளைப் பதிவு செய்கிறோம். :)))

    பதிலளிநீக்கு
  6. விரிவான தகவல்கள் அருமை நண்பரே
    த.ம.6

    பதிலளிநீக்கு
  7. தேர்தல் பற்றிய உங்கள் பதிவுகள் அனைத்தையும் இப்போதுதான் வாசிக்க முடிந்தது. வலைப்பக்கம் இத்தனை நாட்கள் வரமுடியாததால்....

    அனைத்தும் அருமையான தகவல்கள் பயனுள்ளவை...

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895