என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 21 ஜூலை, 2015

ஷர்மிலி மிஸ்! என் பொண்ண ஏன் அடிச்சீங்க?


நண்பர் ஸ்கூல் பையன் சரவணன்,ஷர்மிலி மிஸ் என்ற பதிவை தனது சொந்த அனுபவத்தை  அடிப்படையாகக் கொண்டு சிறுகதை போல அற்புதமாக எழுதி இருந்தார். உண்மையில் நெஞ்சம் நெகிழ வைத்தது என்று சொல்லலாம் . அதை இன்று காலையில் படித்ததும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.ஒரு படைப்பின் வெற்றி தாக்கத்தை ஏற்படுத்துவதுதானே. பல்வேறு எண்ணங்கள் அலை மோத ஸ்கூல் பையனின்   இந்த பதிவிற்கு  இன்னொரு கற்பனை முடிவை பின்னூட்டத்தில் எழுத ஆரம்பித்தேன் நீளமாக ஆகிவிட்டதால் என்னுடைய வலைப்பதிவில் அதனைத் தொடர முடிவு செய்தேன்.

துளசிதரன்,கோவை ஆவி, குடந்தையூர் சரவணன் போன்ற குறும்பட ஆர்வலர்கள் ஸ்கூல் பையனின் பதிவோடு இதனையும் சேர்த்து இந்தக் கதையை குறும்படமாக்க முயற்சிக்கலாம் 

அவரது பதிவின் சுருக்கம்: எல்.கே.ஜி படிக்கும் தன் குழந்தையை பள்ளியில் அடித்து  விட்ட ஷர்மிலி டீச்சரை கோபம் கொண்டு கேள்வி கேட்க  தந்தை செல்ல அங்கு டீச்சரை பார்க்க முடியவில்லை.  காரணம் அவரது தந்தை இறந்து விட்டார் கோபத்தோடு  புறப்பட்டவர் இரக்கத்தோடு காத்திருப்பதகா முடிகிறது . ஸ்கூல் பையனின் பதிவு
ஸ்கூல் பையனியன்  பதிவைப் படிக்க கிளிக் செய்க ஷர்மிலி மிஸ்

ஒரு வேளை ஷர்மிலி மிஸ்ஸைப் பார்த்து கோபத்துடன்  பேசியிருந்தால் எப்படிப் போகும் கதை என்ற கற்பனையே எனது இப்பதிவு . ஸ்கூல் பையன் மன்னிக்கவும் 


அவருடைய பதிவில் கீழ்க்கண்டசிவப்பில் குறிப்பிட்ட  வாக்கியத்தை  தொடர்ந்து இதனை வாசிக்கவும் 
அடுத்த நாள் புதன்கிழமையன்று காலை நேரத்தோடேயே பள்ளிக்குச் சென்றுவிட்டேன்.
...ஸ்டாஃப்  ரூமில் ஷர்மிலி  மிஸ் இருப்பதாக சொல்ல கோபத்துடன் விரைந்தேன்.
ஷர்மிலி என்னை அடையாளம்  கண்டுகொண்டார். 
"நீங்க கற்பகாஸ்ரீ அப்பாதானே? "
ஷர்மிலி மிஸ்ஸின் மென்மையான குரல் எனது கோபத்தை குறைத்து  விடும் போல இருந்தது . அதை நான் விரும்பவில்லை. சற்றும் கடுகடுப்பு குறையாமல்  "ஆமாம்! கற்பகா வை  அடிச்சீங்களாமே!."
"இல்ல. அவ கொஞ்சம் குறும்பு பண்ணா அதுக்காக லேசா தட்டினேன். அவ்வளவுதான்அவங்க அம்மா கிட்ட கூட சொல்லிட்டனே!"என்றார் பதட்டத்துடன் 
 "குழந்தையை நீங்க எப்படி அடிக்கலாம் . ஆயிரக்கணக்குல பீஸ் கட்டி படிக்கவைக்கிறது உங்க கிட்ட அடி வாங்கவா?. இன்னும் எந்த காலத்தில இருக்கீங்க  ..." 
எனது  கோபத்தை எதிர்பார்க்காத ஷர்மிலி மிஸ்சின் முகம் பயத்தில் மாறியது 

நான் தொடர்ந்தேன் 
"அவ ஏதாவது தப்பு செஞ்சிருந்தா  எங்ககிட்ட தான் சொல்லணுமே தவிர நீங்க அடிக்கக் கூடாது. குழந்தைகளை அடிக்கறதுக்கு பெத்தவங்களுக்கே உரிமை இல்லை. நீங்க எப்படி அடிக்கலாம்? குழந்தைங்க என்ன கல்லா ? அசையாம அப்படியே இருக்கிறதுக்கு. பி.எட். ல சைல்ட் சைக்காலஜி படிச்சிட்டுதானே வந்தீங்க. குழந்தைகளை எப்படி ட்ரீட் பண்ணனும்னு தெரியாதா?.  சைல்ட் ப்ரொடெக்ஷன் சட்டம் இருக்கு தெரியுமா? இன்னொரு தடவை  இப்படி நடந்தா சும்மா இருக்க மாட்டேன் . பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன். அவர் கேக்கலைன்னா சி இ ஓ கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன், அதுக்கு மேலயும் போவேன்" என்று கத்தினேன். 
 நான் சத்தம் போடுவதை கேட்டு ஓடிவந்த மற்ற டீச்சர்கள் "சார்! நீங்க போங்க பாத்துக்கறோம்  என்று  என்னை சமதானப் படுத்தி அனுப்பினர் 
ஆனாலும் குழந்தையை அடித்ததை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை  
    வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்கு புறப்பட்டேன். வேலையில் மூழ்கிப் போக ஷர்மிலி மிஸ் என்கோபத்தில் இருந்து தற்காலிகமாக விடுதலை பெற்றிருந்தார்..
      இரவு வீடு திரும்பும்போது கற்பகாவுக்கு பிடித்த ஸ்வீட்டை  அடையார் ஆனந்த பவனில் வாங்கிக் கொண்டேன். ரோட்டில் விற்றுக்கொண்டிருந்த பெரிய டெட்டி பியர் பொம்மையையும் வாங்கிக்கொண்டேன் கற்பகாவுக்கு ரொம்பப் பிடிக்கும். 
    பிளாட்ஸ் காம்பவுண்டுக்குள் நுழைந்ததும் எனது வாகன சத்தம் கேட்டு ஓடிவரும் கற்பகா இன்னும் வரவில்லை. ஏதோ ஹோம் ஒர்க் செய்து கொண்டிருப்பாள் அல்லது  மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருப்பாள் என்று நினைத்துக் கொண்டேன்.
மனைவி கதவை திறந்தார் மனைவியைத் தாண்டிப் பார்த்தேன் ஹாலில் குழந்தை  கண்ணில் படவில்லை .
"பிரபா, குழந்தை சாப்பிட்டாளா, அதுக்குள்ளயா தூங்கிட்டா? கற்பகா! உனக்கு அப்பா என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு !  அவளை கூப்பிடு"   என்று சொல்லிவிட்டு ஆடை மாற்றிக் கொண்டு வந்தேன். 
"ஏண்டி! உங்கப்பா கூப்பிடறது காதுல விழலயா?. நீங்க வர்ற வரைக்கும் நல்லாத்தான் விளையாடிக்கிட்டிருந்தா இப்பதான் ரூமுக்குள்ள  போனா. நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு. ரொம்பதான் செல்லம் கொடுத்து வச்சுருக்கீங்க "என்று அம்மாக்களின் வழக்கமான டயலாக்கை பேசினாள்
    அப்போதும் கற்பகாவரவில்லை நான் அவள் ரூமுக்குள் நுழைந்தேன். கட்டிலின் மூலையில் உம்மென்று உட்கார்ந்து கொண்டிருந்தது என் செல்லம்.. நான் போனதும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
 "ஒரு வேளை ஜுரமாக இருக்குமோ "  நேற்று டீச்சர் அடித்தது வேறு நினைவுக்கு வந்தது. அதனால்  காய்ச்சல் வந்திருக்குமோ? தொட்டுப் பார்த்தேன். நார்மலாகத் தான் இருந்தது 
"ஏம்மா? என்ன ஆச்சு? .டாடி உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு."
...........................
"ஏன் கோவம்?  என் செல்லம்! உன்னை அடிச்ச  மிஸ்சைத்தான் நான் திட்டிட்டு வந்துட்டனே! நான் திட்டினதுக்காக உன்னை திரும்பவும் உன்னை அடிச்சாங்களா? இல்லை திட்டினாங்களா? சொல்லு. அந்த மிஸ்சை ஒரு வழி பண்ணிடறேன். என்ன நினைச்சிக்கிட்டிருக்காங்க . பயப்படாமா உண்மைய சொல்லு "  
பொம்மையையும் ஸ்வீட்டையும் கொடுத்தேன் . கோபத்துடன் தூக்கி எறிந்தாள் கற்பகா 

"போங்க டாடி! எங்க மிஸ்ஸை ஏன் திட்டினீங்க? பாவம்! ஷர்மிலி மிஸ். இன்னைக்கு   பூரா அழுதுக்கிட்டே இருந்தாங்க. 'உன்னாலதான்  மிஸ் அழறாங்கன்னு என் பிரண்ட்செல்லாம் என்னை திட்டினாங்க.  . என்கிட்ட கொஞ்ச பேர் டூ கூட விட்டுட்டாங்க. அப்புறம் நான் மிஸ் கிட்ட போய் சாரி மிஸ்! இனிமே எங்கப்பாகிட்ட சொல்லமாட்டேன்னு சொன்னேன்.. இனிமே நீங்க ஸ்கூலுக்கு வராதீங்க டாடி" என்று சொல்லிவிட்டு மீண்டும் முகத்தை திருப்பிக்கொண்டாள் 
என்ன சொல்வதென்று தெரியாமல் நான் திகைத்து நிற்க

காபி கொண்டு வந்த பிரபா என்னைப் பார்த்து  புன்னகைத்தாள். ஏளனமாய்!

                                           *********************************

பாத்திரங்கள் : 
தந்தை : சரவணன் 
மகள் : கற்பகாஸ்ரீ
தாய் : பிரபா 
மிஸ் : ஷர்மிலி 

நன்றி; ஸ்கூல் பையன் 


49 கருத்துகள்:

  1. நல்லாயிருக்கு.... இதுவும் நல்லாயிருக்கு...

    பதிலளிநீக்கு
  2. இந்தக் காட்சி அமைப்புக்கு சிவாஜி - பத்மினியின் 'இருமலர்கள்' நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  3. குழந்தையின் மனதை அப்படியே படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. இப்போ டீச்சர்கள் நிலை இது தான்!

    பதிலளிநீக்கு
  5. இந்த திருப்பமும் அழகாகத்தான் இருக்கிறது கதை முடிந்ததா அல்லது முரளி போல வேறு யாரும் இந்த கதையை தொடரப் போறீங்களா? தொடர்ந்தால் மிக நன்றாக இருக்கும்... இதை தொடர துளசி. கீதா, பால கணேஷ் சீனு, திண்டுக்கல் தனபாலன் மைதிலி முத்து நிலவன் போன்றவர்களுக்கு முரளி & ஸ்கூல் பையன் சார்பில் அழைப்பு விடுவிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது எண்ணமும் அப்படியே இருந்தது உண்மை...

      நீக்கு
    2. அட! மதுரைத் தமிழா! நாங்க அத வாசிச்சதும் இப்ப முரளி அவர்கள் எழுதி இருப்பது போலத்தான் நாங்கள் பேசிக் கொண்டோம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று. ஏனென்றால் நாமும் குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்தவர்கள் தானே. ஆசிரியை என்னதான் திட்டினாலும், அடித்தாலும் நம் கோபம் அந்த நிமிடம்தான் இருக்கும். பின்னர் அது ஆசிரியையை யாராவது திட்டினால் மனம் பொறுக்காது..அது அம்மா அப்பாவாகவே இருந்தாலும்....நாங்கள் சொல்ல வந்ததை முரளி அழகாகச் சொல்லிவிட்டார்....இப்ப வாத்தியாரும் எழுதிருக்காரு வேறு பெயர் ர்ராதிகா...ம்ம்ம் அப்ப நாங்க ரொமப்வே யோசிக்கணும்...ஹஹஹ்

      நீக்கு
    3. ஷர்மிலி மிஸ் அடிக்காதீங்க மிஸ் http://avargal-unmaigal.blogspot.com/2015/07/sharmili-miss-shortstory.html

      நீக்கு
  6. //ஒரு வேளை ஷர்மிலி மிஸ்ஸைப் பார்த்து கோபத்துடன் பேசியிருந்தால் எப்படிப் போகும் கதை என்ற கற்பனையே எனது இப்பதிவு . ஸ்கூல் பையன் மன்னிக்கவும்//

    ஹையோ... இது இன்னும் சூப்பர்.... குறும்பட ஆர்வலர்கள் எடுப்பதாக இருந்தால் என் மகளையே நடிக்க வைக்கிறேன்... (ஹப்பாடா, துண்டு போட்டாச்சு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் இயக்குனர் என்பதை மனதில் கொள்ளவும் அண்ணே

      நீக்கு
    2. ஹஹாஹ்ஹ சூப்பட் துண்டுப்பா!!!

      நீக்கு
  7. அருமையாகக் கதையைக் கொண்டு சென்றிருக்கிறீர்கள், முரளி. ஒரு ஆசிரியராக நீங்கள் இன்னும் உங்கள் உள்ளக்கிடக்கையை சொல்லவில்லை. தொடர்ந்து எழுதுங்கள், முரளி - ஒரு ஆசிரியரின் பார்வையில் இந்த நிகழ்ச்சி எப்படிப் பார்க்கப்படும் என்று. மதுரைத் தமிழன் அழைத்திருப்பவர்கள் இந்தத் தொடரைத் தொடரலாம். இது பதிவுலகில் ஒரு புதிய முயற்சி. பாராட்டுக்கள். இனி தொடரப் போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. அதுதாங்க குழந்தை மனசு..

    அற்புதமா எழுதியிருக்கீங்க..

    God Bless You

    பதிலளிநீக்கு
  9. குழந்தையின் குணத்தை, தனக்கு நேர்ந்த வலியை கூட நொடியில் மறந்துவிட்டு மற்றவருக்காக அழும் பிஞ்சு மனதை மிக அழகாக சொல்லிவிட்டீர்கள்.

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  10. ஆஹா இது நல்லாருக்கே.
    அப்பா செய்தது அருமை, பள்ளியிலும் குழந்தைக்குப் பரிசு வாங்கி வருவதிலும்.

    பதிலளிநீக்கு
  11. இதுவும் அழகாய்தான் இருக்கு வாத்தியாரே! அண்ணாச்சியும் ஆசிரியர் என்பதை கதையில் சொல்லிவிட்டீங்க! அருமை கதைப்போக்கு.

    பதிலளிநீக்கு
  12. இதுவும் ஒருவகையான எதிர்மறை விளைவோ? உளவியல் ரீதியில் தந்தைக்கு ஒரு அருமையான பாடம் மகள் மூலமாக.

    பதிலளிநீக்கு
  13. குழந்தை மனது......

    பல சமயங்களில் பெற்றவர்களை விட ஆசிரியர் சொல்வதே அவர்களுக்கு வேதவாக்கு. ஆசிரியர்களை ஏதாவது சொல்லி விட்டால் அவர்களுக்கு கோபம் வந்துவிடுகிறதே!

    நீங்கள் எழுதிய முடிவும் நன்று. வேறு யார் தொடரப் போகிறார்கள்.... படிக்க ஆவலுடன் நானும்!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்
    முரளி அண்ணா.
    நிஜமான பெயர்களை வைத்து கதை ஒன்று எழுதியமைக்கு வாழ்த்துக்கள் நன்றாக உள்ளது த.ம6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  15. இதுவும் ரொம்ப நன்றாகவே இருக்கிறது பார்க்கலாம் மற்றவர்கள் எப்படி முடிக்கிறார்கள் என்று. ரொம்ப சுவாரஸ்யமாக செல்லும் போல் இருக்கிறதே. நன்றி வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  16. கதை எழுத கரு ஒன்று கிடைத்து விட்டால் , கற்பனைச் சிறகு அடிக்கத் தொடங்கினால் விதவிதமாய்க் கதை பின்னலாம். முன்னது உண்மைக் கதை என்றால் பின்னது கற்பனைக் கதை, இரண்டுமே ரசிக்க வைத்தது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. சகோ கணேஷின் தளத்திலிருந்து வந்தேன். மிக அழகான விவரிப்பு

    கார்த்திக்கின் இடுகையையும் படிக்கப் போறேன் சகோ . நன்றி :)

    பதிலளிநீக்கு
  18. கார்த்திக் சரவணனின் பதிவே சின்னது அதில் நீட்டிக்க என்ன இருக்க போகிறது என்று நினைத்து தான் வந்தேன், மென்மையான உணர்வு முடிச்சு, அட்டகாசம் சார் ... ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  19. அருமையான முடிவு...கார்த்திக் சரவணன் அவர்களின் பதிவு உண்மைக் கதை என்றால் இங்கு கற்பனையில் விரிந்தது அழகு. ஏனென்றால் ஆசிரியர் என்பவர் சிறு குழந்தைகளுக்கு ஒரு ரோல் மாடல்...அருமை நண்பர் முரளி! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  20. பிள்ளைகள் முன் ஆசிரியர் அழக்கூடாது !

    பதிலளிநீக்கு
  21. குழந்தையின் உளப்பாங்கு அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது! குழந்தைகளின் கோபம் சிலநிமிஷங்களில் மறைந்து போகும். தன் மீது அன்புகாட்டுபவர்கள் மீது ஏற்படும் கோபம் விரைவில் தீர்ந்துவிடும். அருமையாக சொன்னீர்கள்! காலையில் மொபைல் மூலம் பின்னூட்டம். விரிவாக எழுத முடியவில்லை! அதனால் இது கூடுதல் பின்னூட்டம்!

    பதிலளிநீக்கு
  22. அது தான் குழந்தைகள். பெற்றோரை ஆசிரியர்களிடமும், ஆசிரியர்களை பெற்றோரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்! அதை புரிந்து எழுதி உங்க எக்ஸ்பீரியான்சை காட்டிடீங்க அண்ணா! நல்ல முடிவு!

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் காற்றே,
    அப்ப நானும் இதைக்கொண்டு எழுதலாம் போல் இருக்கே, அழகாக சொல்லியுள்ளீர்,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  24. பாதியிலேயே ஊகித்தேன் முடிவு இப்படிப் போகுமென..!

    தொடர்கிறேன்.

    தந்தை சொல்லும் சில வார்த்தைகளை உங்களின் நேரடி அனுபவத்திலும் சொல்லி இருப்பீர்கள் போல இருந்தது.


    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்முடைய னுபவம் மட்டுமல்லாது மற்றவர்களுடைய அனுவத்தை வைத்தும் புனைவதுதானே கதை

      நீக்கு
  25. தொடர் பதிவு கேட்டிருக்கோம்.. இது தொடர்கதையா..! உங்கள் கோணமும் சிறந்ததே... மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் அக்கறை vs மகளின் மீதான தந்தையின் பாசம்.. இரண்டில் எது வென்றது என்றுதான் முடிந்திருக்க வேண்டும் இக்கதை. அதையும் மீறி வித்தியாசமாய் இருந்தது உங்களின் முடிவு..

    ஆசிரியையின் கண்டிப்பில் உள்ள நியாயம் மற்றும் அப்பாவின் கண்மூடித்தனமான பாசத்தின் வெளிப்பாடு இரண்டையும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துக்கு நன்றி மணிமாறன்.
      இது நீண்ட நேரம் யோசித்து உருவாக்கப்பட்டதல்ல. ஸ்கூல் பையனின் அனுபவப் பதிவைப் படித்ததும் சட்டென்று தோன்றிய முடிவு. பின்னோட்டத்தில் மட்டும்சுருக்கமாக குறிப்பிட நினைத்தேன். பின்னூட்டம் நீளமாகி விட்டதால் தனிப் பதிவாக்கினேன்.. சரியாக ஒரு மணி நேரதிற்குள் முடித்து விட்டேன். இதை டீச்சரின் பார்வையில் இருந்தும் எழுத நினைத்திருக்கிறேன் சிறிது இடைவெளிக்குப் பின்.

      நீக்கு
  26. குழந்தை மனசை படம் பிடித்துக் காட்டுகிறது உங்கள் பார்வையில் கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் 'குழந்தைமனசு' என்றுதான் தலைப்பு வைக்க நினைத்திருந்தேன். ஆனால் அத் தலைப்பு முடிவை முன்பே ஊகிக்க வைத்து விடும் என்பதால் தலைப்பை மாற்றினேன்

      நீக்கு
  27. ரொம்ப நல்லாயிருக்கு ஐயா...
    நாமளும் முயற்சித்துப் பார்க்கலாமோன்னு தோணுது...

    பதிலளிநீக்கு
  28. குழந்தைகள் மனசு இப்படித்தான் இருக்கும்...நல்லா இருக்கு சகோ

    பதிலளிநீக்கு
  29. இது! இப்படித் தான் இருக்கும். குழந்தைகள் தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதை விரும்ப மாட்டார்கள். :)

    பதிலளிநீக்கு
  30. இயல்பை உணர்ந்த கதை..
    வாழ்த்துகள் தோழர்
    தம +

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895