என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 7 பிப்ரவரி, 2013

எப்படி இருந்த மதுரை!-வைரமுத்து


  சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மாநகர் மீது எனக்கு ஒரு பிரமிப்பும் ஈர்ப்பும் உண்டு ஒரே ஒருமுறைதான் மதுரைக்கு சென்றிருக்கிறேன். அதுவும் கோவில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். கலை நகரமான மதுரை என்றாலே கொலை நகரம் என்ற தோற்றத்தை உருவாக்கியதில் நமது சினிமாக்களுக்கு பெரும் பங்கு உண்டு. இருந்தாலும் அது உண்மையோ என்ற எண்ணத்தை    சமீபத்தில் நடந்த கொலை நிகழ்வு ஏற்படுத்தி விட்டது.
இந்த சூழலில் வைரமுத்துவின் மதுரை என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. மனதை மயக்கும் கவிதை இது.உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

                               மதுரை  

                  பாண்டியன் குதிரைக் குளம்படியும்-தூள்
                     பறக்கும் இளைஞர் சிலம்படியும்-மதி 
                  தோண்டிய புலவர் சொல்லடியும்-இனம் 
                     தோகைமார்தம் மெல்லடியும் 

                  மயங்கி ஒலித்த மாமதுரை -இது 
                     மாலையில் மல்லிகைப் பூமதுரை 

                  நீண்டு கிடக்கும் வீதிகளும்-வான் 
                     நிமிர்ந்து முட்டும் கோபுரமும் 
                  ஆண்ட  பரம்பரை சின்னங்களும்-தமிழ்
                     அழுந்தப் பதித்த சுவடுகளும் 

                  காணக்  கிடைக்கும் பழமதுரை-தன்
                      கட்டுக் கோப்பால் இள மதுரை !

                  மல்லிகை மௌவல் அரவிந்தம்- வாய்
                      மலரும் கழுநீர் சுரபுன்னை 
                  குல்லை வகுளம் குருக்கத்தி-இவை 
                      கொள்ளை அடித்த வையை நதி 

                  நாளும் ஓடிய நதி மதுரை-நீர் 
                     நாட்டியமாடிய பதிமதுரை

                  தென்னவன் நீதி பிழைத்ததனால்-அது 
                     தெரிந்து மரணம் அழைத்ததனால் 
                  கண்ணகி திருகி எறிந்ததனால்-அவள் 
                     கந்தக முலையில் எரிந்ததினால் 

                  நீதிக்  கஞ்சிய தொன்மதுரை -இன்று 
                    ஜாதிக் கஞ்சும் தென்மதுரை 

                  தமிழைக் குடித்த கடலோடு-நான் 
                     தழுவேன் என்றே சபதமிட்டு
                  அமிர்தம் பரப்பும் வையை நதி -நீர் 
                     ஆழி கலப்பது தவிர்ப்பதனால் 

                  மானம் எழுதிய மாமதுரை-இது 
                     மரபுகள் மாறா வேல் மதுரை 

                  மதுரை  தாமரைப் பூவென்றும் -அதன் 
                     மலர்ந்த இதழே தெருவென்றும் 
                  இதழில் ஒட்டிய தாதுக்கள்-அவை 
                     எம்குடி மக்கள் திரளென்றும்-பரி

                   பாடல் பாடிய பால் மதுரை-வட
                     மதுரா புரியினும் மேல்மதுரை

                   மீசை  வளர்த்த பாண்டியரும்-பின் 
                     களப்பிறர் பல்லவர் சோழர்களும்-மண் 
                   ஆசை வளர்த்த அந்நியரும்-அந்த 
                      அந்நியரில் சில கண்ணியரும்

                   ஆட்சிபுரிந்த தென்மதுரை-மீ 
                        னாட்சியினால்  இது பெண்மதுரை 

                    மண்ணைத் திருட வந்தவரை- தம்
                        வயிற்றுப் பசிக்கு வந்தவரை-செம்
                    பொன்னைத் திருட வந்தவரை-ஊர் 
                        பொசுக்கிப் போக வந்தவரை-தன்

                    சேயாய்  மாற்றிய தாய்மதுரை-அவர்
                         தாயாய் வணங்கிய தூயமதுரை 

                    அரபுநாட்டுச் சுண்ணாம்பில்-கரும்பு 
                        அரைத்துப் பிழிந்த சாறூற்றி
                    மரபுக் கவிதைபடைத்தல் போல் -ஒரு 
                        மண்டபம் திருமலை கட்டியதால் 

                    கண்கள்  மயங்கும் கலைமதுரை-இது 
                       கவிதைத் தமிழின் தலை மதுரை 

                    வையைக் கரையின் சோலைகளும்-அங்கு 
                       வரிக்குயில் பாடிய பாடல்களும் 
                    மெய்யைச் சொல்லிய புலவர்களும்-தம் 
                       மேனி கருத்த மறவர்களும் 

                    மிச்சமிருக்கும்  தொன்மதுரை-தமிழ் 
                        மெச்சி முடிக்கும் தென் மதுரை 

                    போட்டி வளர்க்கும் மன்றங்களும்-எழும் 
                        பூசைமணிகளின் ஓசைகளும்-இசை 
                    நீட்டி முழங்கும் பேச்சொலியும்-நெஞ்சை 
                        நிறுத்திப் போகும் வளையொலியும்

                    தொடர்ந்து கேட்கும் எழில் மதுரை-கண் 
                         தூங்காதிருக்கும் தொழில்மதுரை 

                    ஆலைகள் தொழில்கள் புதுக்காமல்-வெறும் 
                        அரசியல் திரைப்படம் பெருக்கியதில் 
                     வேலைகள்  இல்லாத் திருக்கூட்டம் -தினம் 
                          வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால் 

                     பட்டக்  கத்திகள் சூழ்மதுரை-இன்று 
                          பட்டப் பகலில் பாழ்மதுரை 

                     நெஞ்சு வறண்டு போனதனால் -வையை 
                         நேர்கோடாக ஆனதனால் 
                      பஞ்சம் பிழைக்க வந்தோர்-நதியைப் 
                          பட்டாப் போட்டுக் கொண்டதனால் 

                      முகத்தை இழந்த முதுமதுரை-பழைய 
                            மூச்சில் வாழும் பதிமதுரை

***********************************************************************************************************************

 

25 கருத்துகள்:

  1. காலம் மாறமாற காட்சிகளும் மாறுகிறது என்ன செய்ய!

    பதிலளிநீக்கு
  2. கவிப்பேரரசின் அருமையான கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. நெஞ்சு வறண்டு போனதனால, வையை நேர்க்கோடாய் ஆனதால்... மனதில் வலியை விதைத்த வரிகள். எங்க ஊரின் பெருமைகளை வைரமுத்துவின் கவிதை வாயிலாகப் படித்து ரசிக்கையில் கூடுதல் சுகம். பகிர்விற்கு நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  4. கவிஞர் வைரமுத்துவின் அருமையான கவிதை....

    மதுரை நடப்புகள் ஒன்றும் சொல்வதற்கில்லை!

    பதிலளிநீக்கு
  5. நல்ல கவிதை...

    இப்ப கிளம்பி வாங்க... மாமதுரை விழா நாளை முதல் ஆரம்பம்...

    மேலும் விவரங்களுக்கு : http://www.tamilvaasi.com/2013/02/mamadurai.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரையை சுத்திப் பாக்கனும்னு ஆசியய்த்டன் இருக்கு. கொடிய சீக்கிரம் வரேன்.
      நன்றி DD

      நீக்கு
  6. நெஞ்சு வறண்டு போனதனால் -வையை
    நேர்கோடாக ஆனதனால்
    பஞ்சம் பிழைக்க வந்தோர்-நதியைப்
    பட்டாப் போட்டுக் கொண்டதனால்

    முகத்தை இழந்த முதுமதுரை-பழைய
    மூச்சில் வாழும் பதிமதுரை //

    மதுரையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது.
    எல்லோரும் ஆழ்துளை கிணறு தோண்டி , தோண்டி நிலத்தடி நீரை எல்லாம் உறிஞ்சி எடுத்து விட்டார்கள். இனி மழை பெய்தால் தான் த்ண்ணீர்.
    தண்ணீர் விற்கும் வியாபாரிகளை நம்பி இருக்கிறது வீடுகள்.

    பதிலளிநீக்கு
  7. //சேயாய் மாற்றிய தாய்மதுரை-அவர்
    தாயாய் வணங்கிய தூயமதுரை//

    எங்க ஊருன்னா சும்மாவா...!

    பதிலளிநீக்கு
  8. //மண்ணைத் திருட வந்தவரை-
    ...
    சேயாய் மாற்றிய தாய்மதுரை//

    சேயே மண் (நிலம்) திருடல் வழக்கில் பேசப்படுகிறதே?

    ***

    நகரமயமாக்கலில் பெரும்பாலான ஊர்களின் நிலைமை இது தான்!

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. அவரின் படைப்புகளில் நான் அதிகம் ரசிக்கும் வகைகளுள் இதுவும் ஒன்று சார்

    பதிலளிநீக்கு
  11. //பழைய மூச்சில் வாழும் பதிமதுரை //
    என்றும் வாழும்!

    பதிலளிநீக்கு
  12. அருமை.பெரும்பாலும் வைரமுத்துவின் கவிதைகள் படிக்கும்போது தரும் உற்சாகத்தைக் காட்டிலும் அவர் குரல்வழிக் கேட்கையில் இன்னும் கம்பீரமாக இருக்கும்.முதல் பத்தியில் வரும் 'ல'-'ள' உச்சரிப்பை மிக அழுத்தமாக வித்தியாசப்படுத்தி வாசித்திருப்பார்.முதல் பத்தியை மட்டும் நிறைய தடவை திரும்ப திரும்பக் கேட்டிருக்கிறேன்.'யூ டியுப்' வீடியோ இருந்தால் அதையும் பகிருங்கள்.

    // தெருவேன்றும் // மாற்றவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.அவர்குரலே கவிதைக்கு அழகு சேர்க்கும் யு ட்யூபில் தேடிப்பார்கிறேன்.

      நீக்கு
  13. என்ன சொல்ல?! படித்ததும் ஏக்க பெருமூச்சு வந்ததை தடுக்க முடியலை

    பதிலளிநீக்கு
  14. மதுரை(யும்) எங்கள் ஊர்! 'சம்பவம்' நடக்கும்போது மதுரையில்தான் இருந்தேன்!

    பதிலளிநீக்கு
  15. அருமையான கவிதையில் அழகிய சொல்லாக்கம் ...நாம் நம்முடைய அடையாளங்களை இழந்துகொண்டிருக்கிறோம் இது நிதர்சனம் ...வேதனையுடன் ...Hameeddvk

    பதிலளிநீக்கு
  16. அன்பின் முரளிதரன் - மதுரையைப் பற்றிய ஆதங்கம் புரிகிறது - வைரமுத்துவின் கவிதை அருமை - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895